திங்கள், 3 அக்டோபர், 2011

குழப்பத்தில் தொடங்கி பெருங்குழப்பத்தில் முடிந்த ஒரு தெளிவான பயணம்:வருகிறீர்களா நீங்களும்?

கடவுளுக்கு 2 கேள்விகள் வைத்திருந்தேன்:
1.கொள்ளை அடிப்பவன்,கொலை செய்பவர்,ஏமாற்றுபவர் பலர் கடைசி வரை நன்றாக வாழ்கின்றனரே?
2.பலர் ஒரு குற்றமும் செய்யாமல் வறுமை,ஊனம்,ஏமாற்றம் என முதலில் இருந்தே கஷ்டப்படுகின்றனரே?
என்ன நியாயம்?

கடவுள் வந்தார்,சிரித்துக் கொண்டே சொன்னார்!
"இவை(இந்த கேள்விகள்) உன்னுடயவை அல்ல, எல்லாம் நான் அருளியதே" என!
தொடர்ந்தார்,. "ஆனால் மீண்டும் உற்றுநோக்கு ,அவை கேள்விகள் அல்ல, பதில்களே! இரண்டில் ஒன்றுக்கான பதிலாக மற்றது உள்ளது பார்! நடுவில்,.. "இறப்பு,மறுபிறவி" என்ற ஒன்றை நீ மறந்துவிட்டாய்! அதனாலே குழப்பம்" என்றார்!

"அதை (மறுபிறப்பு) மறக்கவில்லை ஆனால் மறுக்கிறேன்" என்றேன்,தெளிவாக!

சிரிப்போடே தொடர்ந்தார்:
"உன் சிறுகுழந்தை மக்காகப் போய்விட்டான் ,அல்லது துடுக்கு,திருட்டுதனம் செய்து பிறரை காயப்படுத்துகிறான் என்றால் ,..வீட்டை விட்டுத் துரத்தி அடித்து விடுவாயா? "
என்று கேட்டார்!

உடனே சொன்னேன்"நிச்சயமாக இல்லை,நியாயம் சொல்லித் திருத்த முயற்சிப்பேன்" என்று!

யோசித்துக் கேட்டேன்"ஆனால் அறியாச் சிறுபிள்ளையையும் அநியாய,அக்கிரமப் பேர்வழிகளையும் ஒன்றாய் ஒப்பிடுவது சரியா?"என்று!

சிரிப்போடே சொன்னார் "உனக்கு வேண்டுமானால் அவன் அறியாப்பிள்ளை,ஆனால் சக சிறுவர்களைப் பொருத்தவரை அப்படிச் செய்பவன் வில்லனே! அதுபோல் உனக்கு வில்லனாகத் தெரியும் சகமனிதன் எனக்கு அறியாக் குழந்தையே" என்று!

விடாமல் கேட்டேன் "சரி திருத்தவாவது முயற்சி எடுக்க வேண்டுமே நீர்! அப்படித் தெரியவில்லையே" என்று!

கடவுளும் சிரிப்பு மாறாமல் சொன்னார்.
"உனக்கு ஒருபிள்ளை, எனக்கோ கோடானுகோடி,எல்லாம் ஒரு சுற்றுப் பார்த்து விட்டு வந்து சரிசெய்வதற்கான இடைவெளியே உம் ஓர் ஆயுற்காலம்" என்று!

"நினைத்தவுடன் நிறைவேற்ற முடியாது ,என்னைப் போலவே காலநியதிக்கு கட்டுப்பட்டே இருக்க கடவுள் சக்தி எதற்கு ?"என்றேன்!

"குழந்தாய் குழப்பம் வேண்டாம் அந்தக் கால நியதிக் கோட்பாடுதான் நான்" என்றார்!

விடை பெற்றேன் இப்போதைக்கு வேறு கேள்விகள் இன்றி!

"விரைவில் புதுப் புது சந்தேகங்கள்,விளக்கங்களுடன் மீண்டும் சந்திப்போம்" என்ற நம்பிக்கையுடனே புன்னகைத்து விடைகொடுத்தார் கடவுளும்!